125 ஆண்டுகளுக்குப்பின் ஆழிகுடி வெங்கடாஜலபதி கோவிலில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழிகுடி வெங்கடாஜலபதி கோவிலில் 125 ஆண்டுகளுக்குப்பின் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-22 01:36 GMT

கும்பாபிஷேகம் 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆழிகுடியில் வெங்கிடாசலபதி கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. மிகவும் பழமையானது. கடந்த 125 வருடங்களாக இந்தக் கும்பாபிசேகம் நடைபெறவில்லை. இந்த கோயிலை பராமரிக்க வேண்டும் என உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பெருமாள் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் மிகவும் சிதிலமடைந்த இந்த கோயில் பக்தர்கள் நுழைய முடியாதவண்ணம் மேற் கூரைகள் பிரிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

மேலும் ஒரு கால பூஜை நடந்தாலும், அர்ச்சகர் கூட கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுற்று புறச்சுவர் இன்றி, கதவுகள் உடைந்து பாதுகாப்பற்ற நிலைக்கு கோயில் தள்ளப்பட்டது. இதற்கிடையில் ஆழ்வார் திருநகரி நிர்வாக அலுவலராக அஜித் நியமிக்கப்பட்டார். இவரது முயற்சியில் இந்து அறநிலையத்துறை இந்த கோயிலில் திருப்பணி செய்ய அனுமதி அளித்தனர். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த அறநிலையத்துறை ஒதுக்கீயது. 

இதற்கிடையில் இந்த கோயிலை பராமரித்து புதுப்பிக்க உபதாயத்தார்களும் உதவி புரிந்தனர். தற்போது கோயில் பழமைய மாறாமல் அப்படியே சீரமைத்து, உடைந்து கிடந்த கற்களை எடுத்து மீண்டும் அடுக்கி மிகச்சிறப்பாக திருப்பணி செய்தனர். கோயில் சிலைகள் அனைத்தும் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. சுற்றுப்புறச்சுவர் மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. அதன் பின் இந்த கோயிலுக்கு கும்பாபிசேகம் செய்ய இந்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்தனர்.   
 கடந்த வெள்ளிக்கிழமை, கோயில் யந்திர ஸ்தாபனம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. கடந்த 3 தினங்களாக யாகசாலை பூஜைகள் நடந்து வந்த நிலையில் ஞாயிற்று கிழமை காலை மீண்டும் யாகசாலை பூஜை நடந்தது. அதன்பின்னர் குடம் புறப்பாடு நடந்து . புனித குடம் கோவிலை வலம் வந்தது. அதன்பின்னர் கோயில் விமானத்தில் அபிஷேக நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவருக்கும், பரிவார தேவதைகளுக்கு மகா அபிசேகம் நடந்தது. அன்னதானமும், மாலையில் சப்பரத்தில் வெங்கிடாசலபதி புறப்பாடும் நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் பெரிய திருவடி, இராமனுஜம், சற்குணம், முன்னாள் ஓய்வு பெற்ற ஐ.ஜி. மாசானமூர்த்தி, கோயில் தாசில்தார் ஈஸ்வரநாதன், இன்ஸ்பெக்டர் நம்பி, அறங்காவலர் விக்ரம் கிருஷ்ண, முத்தாலங்குறிச்சி சிவன் கோயில் அறங்காவலர் காமராசு, ரோகினி க்ண்ணன், பஞ்சாயத்து தலைவர் முருகேஸ்வரி தினேஷ், கவுன்சிலர் சுடலை முத்து, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், கோயில் பணியாளர்கள் மந்திர பெருமாள், முத்து பெருமாள், முகுந்தன், முத்துராஜ், விசுவநாதன்,குமாரி, செல்லம்மாள், சுடலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News