சபரிமலை செல்பவர்கள் இதனை எடுத்து வராதீர்கள் !!

Update: 2024-11-20 07:03 GMT

 spiritual

சபரிமலை செல்பவர்கள் தெரியாமல் செய்யும் சில தவறுகள் அவர்களின் விரதம் பலன் அளிக்காமல் போவதுடன், பெரும் துன்பமும் தேடி வருவதற்கான காரணமாக அமைந்து விடுகிறது. சபரிமலை செல்லும் பலரும் செய்யும் தவறுகளில் முக்கியமானது, அங்கிருந்து வீட்டிற்கு மணி எடுத்து வருவது. சபரிமலை சன்னிதானம் செல்வதற்கு முன் பக்தர்கள் மாளிகைப்புறம் சென்று மாளிகைப்புரத்தம்மன் அல்லது மஞ்சமாதாவை வழிபட்டு விட்டு செல்வது வழக்கம். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்ட காலமாக தீராத நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், தீர்க்க முடியாத கடுமையான துன்பங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் அடுத்த ஆண்டு சபரிமலை யாத்திரை வருவதற்குள் அவர்களின் பிரச்சனை நீங்கும் என்பது நம்பிக்கை.

கடுமையான துன்பங்களில், பிரச்சனைகளில் இருப்பவர்களின் தங்களின் பிரச்சனைகள், குறைகள் தீர வேண்டும் என்பதற்காக வேண்டிக் கொண்டு, மாளிகைப்புரத்தம்மன் சன்னதிக்கு பின்புறம் இருக்கும் மணிமண்டபத்தில் மணியை கட்டி விட்டு வருவது வழக்கம். மணி கட்டி விட்டு வந்தால், நம்முடைய பிரச்சனைகளை மணிகண்டனான ஐயப்ப சுவாமியிடம் ஒப்படைத்து விட்டு வந்து விட்டதாகவும், இனி அனைத்தையும் அவர் பார்த்துக் கொள்வார் என்றும் அர்த்தம். மாளிகைப்புரத்தில் கொடுக்கும் மஞ்சளை பெண்கள் தினமும் நெற்றியில் அணிந்து வந்தால் திருமணம், குழந்தை பேறு கைகூடும் என்பது நம்பிக்கை.

மாளிகைப்புரத்தில் உள்ள மணிமண்டபத்தில் மணி கட்டுவதன் சரியான அர்த்தம் தெளியாமல், கோவிலில் இருக்கும் மணியை எடுத்து வந்து நம்முடைய வீட்டில் வைத்தால் நமக்கு நல்லது நடக்கும் என நினைத்துக் கொண்டு அங்கு கட்டப்பட்டிருக்கும் மணியை எடுத்து வந்து விடுகிறார்கள். உண்மையில், யாரோ ஒருவர் அவரின் குறை அல்லது துன்பம் தீர கட்டிய மணியை நீங்கள் எடுத்து வருவதால், அவர்களின் துன்பங்கள் அல்லது குறைகளை அல்லது நோய்களை அவர்களுக்கு பதிலாக நீங்கள் உங்களின் வீட்டிற்கு எடுத்து வருகிறீர்கள் என்று அர்த்தம். இது நம்முடைய துன்பத்தை தீர்ப்பதற்கு பதிலாக, அதிகமாக்கி விடும். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்களின் துன்பங்கள் நீங்க வேண்டும் என அன்னையிடம் மனதார வேண்டிக் கொண்டு, யாத்திரை செல்லும் போதே வீட்டில் இருந்து புதிய மணியை வாங்கிச் சென்று, அங்கு கட்டி விட்டு வர வேண்டும். மாறாக மாளிகைப்புறத்தில் உள்ள மணிமண்டபத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிகளை வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது.

Tags:    

Similar News