அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்தபுத்திரி அலங்காரம்
அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்தபுத்திரி அலங்காரம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
By : King 24x7 Website
Update: 2023-10-25 08:38 GMT
காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான நவராத்திரி விழா, கடந்த 14ல் துவங்கியது. இதில், தினமும், இரவு 7:00 மணிக்கு பல்வேறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதில், ஒன்பதாம் நாளான நேற்று முன்தினம், சீமந்தபுத்திரி அலங்காரம் நடந்தது. இதில், உற்சவர் மற்றும் மூலவர் அம்மன் இருவருக்கும் கர்ப்பிணி போல அலங்காரம் செய்யப்பட்டு, சீமந்தபுத்திரி உற்சவம் நடந்தது. இதில், கர்ப்பிணியருக்கு சீமந்தம் சடங்கின்போது செய்வதை போன்று, சீமந்தபுத்திரி அலங்காரத்தில் இருந்த அன்னை ரேணுகாம்பாளுக்கு பெண் பக்தர்கள், வளையல் அணிவித்தும், நெற்றியில் குங்குமம் வைத்தும், ஆரத்தி எடுத்தும் அம்மனை வழிபட்டனர். விழாவில், காஞ்சிபுரம் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த ஆண்டு விழாவில் பங்கேற்று, குழந்தைபேறு பெற்ற தம்பதியர் நேர்த்திக்கடனாக குழந்தையின் எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வழிபட்டனர். இன்று, இரவு 7:00 மணிக்கு பிள்ளைபெற்ற பேரரசி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.