சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை ; வழிப்பாட்டு முறைகள் !!

Update: 2024-10-10 11:00 GMT

சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் நவராத்திரியின் நிறைவு நாள் அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று காலை 07.22 வரை அஷ்டமி திதி உள்ளது. அன்று உத்திராடம் நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. உத்திராடம் நட்சத்திரம் சூரியனுக்குரிய நட்சத்திரம் ஆகும்.

ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் தான் தலைமை பதவி, அரசாங்க பதவி ஆகியவற்றை தரக் கூடியவர். அதே போல் உத்திராடம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முழு முதற்கடவுளும், ஞான வடிவமுமான விநாயகப் பெருமான். ஞான முதல்வனான விநாயகருக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் இந்த ஆண்டு ஞானத்தின் கடவுளான சரஸ்வதி தேவிக்குரிய பூஜை நாள் வருவது தனிச்சிறப்பாகும்.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என்பது நம்முடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய, நம்முடைய வாழ்க்கை எதை அடிப்படையாக வைத்து நடந்து கொண்டிருக்கிறதோ அந்த பொருட்களை வைத்து வழிபடுவதற்கான நாளாகும்.

வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களின் புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து வழிபடலாம். தொழில் செய்பவராக இருந்தால் அதற்கு என்னென்ன பொருட்கள் பயன்படுகிறதோ அதை வைத்து வழிபடலாம்.

நாம் கற்கும் கல்வி, கலைகள், செய்யும் தொழில்கள் வளர்ச்சி அடைய வேண்டும். நம்முடைய வாழ்க்கை மேலும் மேலும் உயர்ந்த நிலையை அடைந்து, சிறக்க வேண்டும் என வழிபட வேண்டும்.

பெரும்பாலானவர்கள் விஜயதசமி அன்று தான் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வித்யாரம்பம் செய்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் தற்போது சரஸ்வதி பூஜை அன்றே பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், வித்யாரம்பமும் நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News