எழுநூற்று பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்
தலைச்சங்காடு எழுநூற்று பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே தலைச்சங்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற எழுநூற்று பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் திருப்பணி வேலைகள் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 21 ஆம் தேதி அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாகுதி செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவான நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து வானவேடிக்கையுடன் மேள வாத்தியங்கள் முழங்க யாகசாலையிலிருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடாகி விமான கோபுரத்தை அடைந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து விநாயகப் பெருமானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தலைச்சங்காடு கிராம மக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.