தமிழ்நாட்டில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை !!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து இன்று 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக நண்பகல் 12 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு பின்னர் மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படும்.
இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நண்பகல் 12 மணிக்கு வடபழனி முருகன் கோவில் நடை அடைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிலில் இன்று நள்ளிரவு 12 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கோவில்களில் குவிந்தனர். சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில் மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணி தேவாலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.