திருச்செந்தூரில் இருந்து அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூரில் இருந்து அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பயணம் இன்று தொடங்கியது.

Update: 2024-06-08 09:45 GMT

ஆன்மிக பயணத்தில் கலந்து கொண்டவர்கள்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணமாக தங்கும் இடம், உணவு வசதியுடன் 60 முதல் 70 வயதுக்குட்ட பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

தற்போது 3-ம் கட்டமாக இன்று திருச்செந்தூரில் இருந்து ஆன்மிக பயணம் தொடங்கியது. இந்த பயணத்தில் மதுரை, சிவகங்கை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலங்களை சேர்ந்த 202 பக்தர்கள்,

அறநிலையத்துறை அலுவலர்கள் 40 பேர் என மொத்தம் 242 பேர் 5 பஸ்களில் சென்றனர். இதை முன்னிட்டு நேற்று மாலை ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு கோவிலில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் வைத்து கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலையில் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள இடத்தில் இருந்து ஆன்மீக பயணம் புறப்பட்டது.

ஆன்மிக பயணத்தை திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், அறங்காவலர்கள் கணேசன், செந்தில்முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட அறங்காவலர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் அந்தோணிரூமன், சுதாகர், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

 ஆன்மிக பயணமானது இன்று காலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு பழமுதிற்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழனி ஆகிய படை வீடுகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிற 10-ந் தேதி ஊர் திரும்புகின்றனர்.

Tags:    

Similar News