ஸ்ரீரங்கம் - நம்பெருமாள் சௌரிக் கொண்டை அணிந்து காட்சி
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து எட்டாம் நாளான இன்று சௌரிக் கொண்டை அணிந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது பகல் பத்து எட்டாம் நாளான இன்று காலை திருநறையூர் பாசுரங்களுக்கேற்ப மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு உற்சவர் நம்பெருமாள் சௌரிக் கொண்டை அணிந்து, அதில் கலிங்கத்துறாய், நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம், கல்இழைத்த ஒட்டியாணத்தை தலைக்கட்டாக அணிந்து; மார்பில் பங்குனி உத்திர பதக்கம்; அதன் மேல் தாயார் - பதக்கம்; அடுக்கு பதக்கங்கள்: நெல்லிக்காய் மாலை, தங்கப்பூண் பவழ மாலை; காசு மாலை; 6 வட முத்து மாலை; சிகப்புக்கல் அபய ஹஸ்தம்; கோலக் கிளி உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடிமூலஸ்தானத்தில் இருந்து தங்கபல்லக்கில் ஆழ்வார்கள் புடைசூழ பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பின்னர் மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9. 45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல்பத்து வைபவத்தின் 10 ஆம் நாள் வரும் டிசம்பர் 22-ம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். அதன் பின்னர் டிசம்பர் 23-ம் தேதி அதிகாலை 4- மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு எனப்படும். சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். அப்போது ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் அதிகாலை 4.00 மணிக்கு பரமபதவாசலை திறந்து கடந்து செல்வார்.