ஏழுமலையானை தரிசிக்கும் முறை !!
இந்தியாவில் உள்ள பெருமாளின் 8 சுயம்பு மூர்த்த தலங்களில், 'வேங்கடாத்ரி' எனப்படும் திருமலை திருப்பதியும் ஒன்று. இங்கு பெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பொதுவாக திருப்பதிக்கு வருபவர்கள், நேராக திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசிக்கும் வரிசையில் நின்று கொள்வதும், பின்னர் அவரை தரிசித்து விட்டு, உடனடியாக வீடு திரும்புவதுமே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் திருப்பதி ஏழுமலையானை எப்படி தரிசிக்க வேண்டும் என்பது ஒரு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதலில் கீழ் திருப்பதியில் அருளும், கோவிந்தராஜப் பெருமாளை தரிசிக்க வேண்டும். அதன்பிறகு அலர்மேல்மங்காபுரம் சென்று அங்கு வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரை வணங்க வேண்டும். அதன்பிறகே திருமலையின் மீது ஏற வேண்டும். அப்போதும் நேராக சென்று ஏழுமலையானை தரிசிக்கக் கூடாது. திருமலையில் உள்ள வராக தீர்த்தக்கரையில் அருளும் வராக மூர்த்தியை தரிசிக்க வேண்டும். அதன்பிறகுதான் ஏழுமலையானை வழிபட வேண்டும்.