திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் மகாபிஷேக வழிபாடு
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் சரபேஸ்வரருக்கு ருத்ர ஹோமம் மகாபிஷேக வழிபாட்டில் தருமபுர ஆதீனம் பங்கேற்றார்.
திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் சரபேஸ்வரருக்கு ருத்ர ஹோமம் மகாபிஷேக வழிபாடு - தருமபுர ஆதீனம் பங்கேற்பு தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாய கம்பகரேஸ்வரர் கோயில் உள்ளது.
இங்கு தனி சன்னதி கொண்டு சரபேஸ்வரர் அருள் பாலிக்கிறார். தமிழ் புத்தாண்டு தினத்தில் சரபேஸ்வரருக்கு மகா ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், சந்தனம் என பல்வேறு வகையான வாசனாதி திரவியங்களைக் கொண்டு மகாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தருமபுர ஆதீனம் முன்னிலையில் கடம் புறப்பாடு நடைபெற்று சரபேஸ்வரருக்கு கட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் :- சரபேஸ்வரருக்கு மகா ருத்ர ஹோமம் செய்து மகாபிஷேகம் செய்து வழிபடுவதால் வழக்குகள் வெற்றி, குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி என பல்வேறு நற்பலன்கள் நடைபெறும்.
பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சரபேஸ்வரர் மகா அபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் முன்கூட்டியே கோயில் நிர்வாகத்தில் தெரிவித்தால் சிரமமின்றி தரிசனம் செய்ய வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.