நாளை 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

நாளை முதல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடக்கம். 11 ம் வகுப்பு பாெதுத்தேர்வை 8.20 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Update: 2024-03-03 17:48 GMT

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை முதல் மார்ச் 25 ஆம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. மொத்தம் 7534 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகள் என 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனித்தேர்வர்களாக 5000 மாணவர்களும், சிறைவாசிகள் 187 பேரும் பொதுத்தேர்வினை எழுத உள்ளனர். இதற்காக 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் பொதுத்தேர்வினை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக 154 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை உறுப்பினர்கள் 3200 பேரும், 1134 பறக்கும் படையினரும், தேர்வினை கண்காணிக்கும் பணியில் 46 ஆயிரத்து 700 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரை 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சிராப்பள்ளி, புழல் சிறையில் உள்ளவர்களும் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News