195 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு வேலூர் ஆட்சியர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

Update: 2024-03-30 08:45 GMT

வேலூர் மாவட்ட ஆட்சியர்

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,303 வாக்குச்சாவடிகள் மற்றும் 4 துணை வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 24-ந் தேதி அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,628 பேரும், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 1,234 பேரும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 1,318 பேரும், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் 1,017 பேரும், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 1,075 பேரும் என மொத்தம் 6,272 பேர் பயிற்சி வகுப்புக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் 473 அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் தீவிர நோய்வாய்பட்டு இருக்கும் பணியாளர்களுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 278 வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாததற்கான காரணங்களை மருத்துவ மற்றும் உரிய ஆவணங்களுடன் தெரிவித்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 195 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களுடைய விளக்கத்தினை முறையாக தெரிவிக்க வேண்டும். மேலும் அடுத்த கட்டமாக நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ள தவறும் நபர்களின் மீது இந்திய தேர்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News