தஞ்சை பெரியகோவிலை குடும்பத்துடன் ரசித்த ஹாலிவுட் நடிகர்
தனது குடும்பத்துடன் தஞ்சாவூர் பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ், கோவிலில் சிற்பக்கலையை வெகுவாக ரசித்தார்.
ஹாலிவுட் நடிகரான மைக்கேல் டக்ளஸ், தனது குடும்பத்துடன் தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிற்பங்களையும், கலையும் ரசித்து விட்டு, சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார்.
'அவெஞ்சர்ஸ்’, 'தி அமெரிக்கன் பிரசிடெண்ட்', 'தி கேம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துப் புகழ்பெற்ற அமெரிக்க நடிகரும், படத்தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸ். இவர் இரண்டு ஆஸ்கர் விருது, ஐந்து கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
சமீபத்தில் கோவாவில் நடந்த 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விருதை பெற்ற மைக்கேல் டக்ளஸ், தனது மனைவி கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ் மற்றும் மகன் டிலானுடன் ஆகியோருடன் இந்தியாவில் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு வந்த மைக்கேல் டக்ளஸ், பெரியகோவிலின் கட்டடக் கலையும், சிற்பங்களையும் பார்த்து வியந்து ரசித்தார். கோவில் குறித்து கேட்டறிந்தார். பின்னர், தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். கோவில் முன்பு தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை மைக்கேல் டக்ளஸ் தனது "எக்ஸ்", பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.