அதிமுக.,வினரின் ஓட்டைப் பெற பிரதமர் மோடி புகழ்ச்சி !

'அதிமுக.,வினரின் ஓட்டைப் பெற எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்து பேசுகிறார்' என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

Update: 2024-03-01 12:06 GMT

விசிக தலைவர் திருமாவளவன் 

நாகர்கோவிலில் நடைபெறும் கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (பிப்.29) தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கே செய்தியாளர்களை சந்தித்த அவர், "பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்து சென்றிருக்கிறார். குறிப்பாக பல்லடத்தில் அவர் பேசுகையில் 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை. 10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதை, என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் கொள்கைகளைப் பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதா, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை விமர்சிப்பது அத்துடன் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களையும் புகழ்ந்து பேசுவது போன்ற உத்தியை கையில் எடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. அவர் தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை.

தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன் மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் பண்ண முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதைத்தான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது. எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அதிமுகவின் ஓட்டைப் பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும். அதன் வாக்கு சதவிகிதத்தை சரியச் செய்ய வேண்டும் என பாஜக கணக்கு போடுகிறது என உணர முடிகிறது.

அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டுக்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அதிமுக தொண்டர்கள் உணர வேண்டும். அதிமுக தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டுகிறது. அதேபோல், தூத்துக்குடியில் பேசிய பிரதமர் தான் பிரதமர் என்பதை மறந்து விட்டு அரசு விழா என்பதையும் மறந்துவிட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மேடையில் இருக்கிறார் என்பதையும் மறந்து திமுகவை கடுமையாக விமர்சிக்க கூடிய உரையாக ஓர் அரசியல் பிரச்சார மேடையாக அதை அவர் பயன்படுத்திக் கொண்டார். மக்களவையில் அவர் கடைசியாக ஆற்றிய உரையும் அப்படித்தான் இருந்தது அவருடைய பொறுப்புக்கு இவை அழகல்ல என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தாலும். சுற்றி சுழன்று பரப்புரைகளை மேற்கொண்டாலும். தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள். பாஜகவுக்கு அவர் வருகைகளால் பெரிய செல்வாக்கு உருவாகாது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி அடித்துச் சொல்கிறது. வருகிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறும்.” எனக் கூறினார். தொகுதிப் பங்கீடு குறித்து கேட்டதற்கு ஓரிரு நாட்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தொல் திருமாவளவன், "முன்பு கிராமப்புறங்களில் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக் கொலை நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு இதுபோன்ற சாதிய பாகுபாடுகளைக் களைந்து இதற்கான புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

Tags:    

Similar News