காரியாபட்டி அருகே கல்குவாரியில் வெடி விபத்து - 3 பேர் பலி

காரியாபட்டி அருகே உள்ள தனியார் கல்குவாரியில் லாரியிலிருந்து குடோனுக்கு வெடிபொருள்கள் மாற்றிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.வெடி விபத்து நடந்த இடத்தில் மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்

Update: 2024-05-02 01:43 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் ஆய்வுரைச் சேர்ந்த சேது என்பவர் பெயரில்  ஆர்.எஸ்.ஆர் என்ற கல்குவாரி செயல்பட்டு வருகிறது.‌ இந்த கல்குவாரியில் மே 1 தொழிலாளர் தினம் விடுமுறை தினமான நேற்று  அங்கு பணிபுரியும் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (47) தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அருகே வடமலாபுரம் பெரியதுரை (25), சிவகிரி அருகே உள்ள செந்தட்டியாபுரத்தை சேர்ந்த குருசாமி (60) ஆகிய மூன்று பேர் கல்குவாரிக்குள் வெடி மருந்து லாரியில் இருந்து குடோனுக்கு வெடிபொருள்கள் மாற்றிக் கொண்டிருந்தனர். இரண்டு வேன்களிலிருந்து வெடிபொருட்கள் இறக்கி கொண்டிருந்த போது அப்போது அங்கு எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வெடி விபத்தில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.‌ இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவியூர் போலீசார் முதலில் ஆய்வு மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு நேரில் ஆய்வு செய்தனர். உடல்கள் சிதறி கிடக்கும் இடத்திற்கு பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுத்தனர். காவல்துறையினர் வருவாய்த் துறையினர் தீயணைப்பு துறையினர் மட்டும் உடல்கள் சிதறி கிடக்கும் இடத்திற்கு நேரில் சென்று அங்கு உடல்களை அடையாளம் காணுவது குறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.

வெடி விபத்து நடைபெற்ற கல்குவாரியில் மதுரை மாநகர் வெடிபொருள் தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் அங்கு வேறு ஏதேனும் வெடி பொருட்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபின் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா அளித்த பேட்டியில் இந்த கல்குவாரியில் வேறு எங்கேனும் வெடிபொருட்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.‌ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என கூறினார்.‌ இந்த வெடி விபத்து நடந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் இந்த கல்குவாரியில் உள்ள வெடிபொருள் குடோன் ஸ்ரீவில்லிபுத்துரை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் ஆவியூரை சேர்ந்த பெயரில் லைசென்ஸ் பெற்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்குவாரி உரிமையாளர் சேது ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இங்கிருந்துதான் சுற்றுவட்டார கல்குவாரிகளுக்கு வெடி மருந்து கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. வெடி விபத்து நடந்த இடத்தில் மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார். மூன்றாவதாக உள்ள மற்றொரு லாரியில் வெடிபொருட்கள் முழுமையாக இருப்பதால் வெடிகுண்டு நிபுணர்கள் கல்குவாரியை சுற்றி முழுமையாக தண்ணீர் அடித்து அப்பகுதி முழுவதும் குழுமைப்படுத்தி வெடிபொருட்களை வெளியே எடுக்க உள்ளனர். இதற்காக கல்குவாரியில் உள்ள இருந்த பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் வெளியேற்றினார்.

Tags:    

Similar News