“விஜய் கட்சியை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல” - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை இன்று (செப்.5) நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ''நடிகர் விஜய்யின் கட்சி மற்றும் அவர் நடித்த படத்தை திமுக தடுக்க முயற்சிக்கிறது என்பது தவறான செய்தி. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது அமைச்சர் உதயநிதி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் அல்ல. அரசியல் கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. தமிழர்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்துக்காக திமுக பாடுபட்டு வருகிறது.
ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக திமுக தொடங்கப்படவில்லை. தமிழர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சியாகும். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. சில கட்சிகள் தொடங்கிய வேகத்தில் காணாமல் போயிருக்கிறது. ஆகவே நாங்கள் யாரையும் கண்டு பொறாமை கொள்ளமாட்டோம் அவர்களை தடுக்க மாட்டோம். முடிந்தால் வாழ்த்து சொல்வோம். மக்களின் உரிமைகளுக்காக எந்தக் கட்சி உறுதுணையாக இருக்கிறது என்பதை பொறுத்து தேர்தலில் அந்த கட்சியை மக்கள் ஆதரிக்கிறார்கள்” என்றார்.