கலைஞரின் மறு உருவமாக கனிமொழி எம்.பி: அமைச்சர் பேச்சு!
அ.தி.மு.க. காணாமல் போய்விட்டது. அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. இருக்காது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-06 09:35 GMT
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் முதலமைசசர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்செந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோரும் பயன் பெறும் வகையில் பட்ஜெட் தந்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்தி உள்ளார். அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் ரூ1,000, குடிசை வீடுகள் இல்லாத தமிழகம் என்ற அடிப்படையில் வீடு இல்லாதவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார். இந்த அரசு சிறுபான்மை மக்கள் நலன் காக்கும் அரசாக உள்ளது. கனிமொழி எம்.பி.க்கு இணையாக எந்த எம்.பி.யும் இல்லை. மழை வெள்ளம் காலங்களில் அவர் சிறப்பாக பணியாற்றினார். கலைஞரின் மறு உருவமாக கனிமொழி எம்.பி மீண்டும் இந்த தொகுதியில் எம்.பி.ஆக நிற்கிறார். இந்தியா கூட்டணி வெற்றி பெறப்போகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி தான் வரப்போகிறது. தொழிலாளர் அனைவரையும் காக்கும் ஒரு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் உள்ளார். நிச்சயமாக பா.ஜ.க.வை வீழ்த்தி காட்டுவார் மு.க.ஸ்டாலின். அவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமராக வருவார். தற்போது அ.தி.மு.க. காணாமல் போய்விட்டது. இந்த தேர்தலோடு அதுவும் முடிந்துவிடும். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. இருக்காது இவ்வாறு அவர் பேசினார்.