கரூர் எம்பி ஜோதிமணிக்கு சீட் வழங்க கூடாது - காங்கிரஸ் தீர்மானம்

கரூர் எம்பி ஜோதிமணிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கக் கூடாது. கரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2024-02-14 09:40 GMT

 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணி உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த பேங்க் சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் எதிராக செயல்படும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஜோதிமணி கட்சியினரிடமும், கூட்டணி கட்சியினரிடம், முறையாக செயல்படாமல் தன்னிச்சையாக செயல்பட்டு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளதாகவும், அதனால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது என தெரிவித்தார். மேலும் தொகுதிக்கு நன்கு அறிமுகமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாரை முன் நிறுத்தினாலும் அவருக்காக கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவதாக காங்கிரஸ் கட்சி மேல்நிலைத் தலைவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியை, தமிழக மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தர வேண்டும் என தீர்மானம் இயற்றி உள்ளதாகவும் தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராக உள்ள நான் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். எனவே, கட்சி எனக்க வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் என்றார்.

Tags:    

Similar News