குவைத் தீ விபத்தில் பேராவூரணி வாலிபர் பலி ?
குவைத் தீ விபத்தில் பேராவூரணியை சேர்ந்த வாலிபர் உயிரிழந்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். ஆனால், வெளியுறவுத்துறை அலுவலர்கள் இதுகுறித்து உறுதிப்படுத்தியதாக தெரியவில்லை.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன், விவசாயி, இவரது மனைவி லதா. இவர்களுக்கு ருனாஃப் ரிச்சர்ட் ராய் (28), ரூஷோ (25), என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குவைத்தில் நாட்டில் மங்காப் என்ற இடத்தில் என்.பி.டி.சி என்ற கட்டுமான நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு ஆய்வாளராக ருனாஃப் ரிச்சர்ட் ராய் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் தனது இல்லத் திறப்பு விழாவிற்கு சொந்த ஊர் திரும்பியவர், ஒன்றரை மாதம் ஊரில் இருந்து விட்டு சமீபத்தில் தான் மீண்டும் குவைத் திரும்பினார்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை குவைத்தில் நடந்த தீ விபத்தில் ஒரே கட்டடத்தில் தங்கி இருந்த சுமார் 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் விபத்தில் சிக்கினர். இதில் 41க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதே கட்டடத்தில் தங்கி இருந்த ருனாஃப் ரிச்சர்ட் ராய் குறித்த விவரங்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை. அவருடைய செல்போன் எண்ணுக்கு பெற்றோர்கள் தொடர்பு கொண்ட போது அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கியுள்ள அவருடைய நண்பர்களிடம் கேட்டபோது எந்த தகவலும் தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டப்பேரவை நா.அசோக்குமார், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மக்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் மூலம் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். தங்களது மகன் குறித்த எந்த தகவலும் தெரியாததால், அவர்களின் பெற்றோர், உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தங்களின் மகனை பத்திரமாக மீட்டுத்தாருங்கள் என அவரது பெற்றோர் கண்ணீர் மல்க மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ருனாஃப் ரிச்சர்ட் ராய் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், வெளியுறவுத்துறை அலுவலர்கள் இதுகுறித்து உறுதிப்படுத்தியதாக தெரியவில்லை.