சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் !

Update: 2024-06-26 05:59 GMT

மு.க ஸ்டாலின் 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் தினமும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக இருப்பதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“சமீபகாலமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. நேற்று முன்தினம் கூட பாமகவை சேர்ந்த ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடும் கூட. ஆங்கிலேயர் ஆட்சியின் இருந்து மத்திய அரசால் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பை சட்டத்தின் படி மத்திய அரசு தான் எடுக்க வேண்டும்.

புள்ளிவிவரச் சட்டம் 2008ன் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம். இதன்படி சமூக பொருளாதார கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம். ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது. சட்டப்படி மத்திய அரசால் மேற்கொள்ளக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் நிலைக்க கூடியது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முதன்முறையாக கொரோனாவை காரணம் காட்டினார்கள். அதன் பின்னும் எடுக்கவில்லை. இது கடமையை புறக்கணிக்கும் செயல். மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என கடந்த முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன். மத்திய அரசு உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்”

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News