கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்: ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்
கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்படும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகில் முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பஸ்கள் நிறுத்தும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பஸ் நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம். ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி அருகில் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளதன்படி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூரு செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பஸ்கள் கோயம்பேடு மற்றும் போரூர் சுங்கச்சாவடியில் இருந்து தமிழகத்தின் தென்பகுதிகளுக்கு இயக்கப்படும். மேலும், தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் அந்தப் பகுதியை சேர்ந்த மற்றும் ஈசிஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பஸ் நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பஸ்களும் பயன்படுத்தி 20 சதவீதத்துக்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து ஏற்றிச்செல்கிறோம். இந்த பஸ் நிலையம் அந்தப் பகுதி மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து இணைக்கும் பயணிகளுக்கு அதிக பயன்களை தரும். இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழக தென்பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பஸ்கள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.