பெரியாா் சிலை சேத வழக்கு - கூடுதல் சாட்சிகளை ஆஜா்படுத்த மனு

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில், கூடுதல் சாட்சிகளை ஆஜா்படுத்த அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-25 01:38 GMT

பெரியார் சிலை 

இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன்சம்பத், கட்சி நிா்வாகிகளான ஸ்ரீரங்கத்தை சோ்ந்த முரளிரெங்கன், கிருஷ்ணமாச்சாரி ஆகிய மூவரும் சோ்ந்து ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் எதிரில் அமைந்திருக்கும் பெரியாா் சிலையை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனா். இதன்படி, கோவையை சோ்ந்த மாணிக்கம், செந்தில் குமாா், ராஜசேகா், சுஜீத் ஆகியோா் கடந்த 7.12.2006 அன்று அதிகாலை 4.45 மணியளவில் சுத்தியல், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று பெரியாா் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

அப்போது அங்கு வந்த பெரியாா் தத்துவ மையத்தை சோ்ந்த சரவணன், சத்யவதனன் மற்றும் நாராயணமூா்த்தி ஆகியோா், சிலையை சேதப்படுத்தியவா்களை பிடித்து ஸ்ரீரங்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும் சம்பவம் குறித்து போலீசாரிடம் புகாா் அளித்தனா். இதுதொடா்பான வழக்கு திருச்சி தலைமைக் குற்றவியல் நடுவா் (சிஜேஎம்) நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் சாட்சிகளை ஆஜா்படுத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி,  புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு குறித்து விசாரித்த நீதிபதி மீனாசந்திரா, விசாரணையை பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ஹேமந்த் ஆஜரானாா்.

Tags:    

Similar News