பொன்பரப்பி தீமிதி திருவிழா
பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி முடிந்து கடந்த 18 நாட்களாக தினசரி இரவு பாரத கதை கூறும் நிகழ்ச்சியும் தினசரி சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
நேற்று காலை திரௌபதி அம்மனுக்கு 16 வகை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் பெரிய தேரில் சுவாமி வீதி உலா புறப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிலில் இருந்து கீழ ஏரிக்கரையில் அமைந்துள்ள தீமிதி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தது. பின்னர் பூங்கரகம் அக்னி கரகம் ஆகியவற்றை ஏந்தி அக்னி குண்டத்தில் பூச்செரிதல் நடைபெற்று பக்தர்கள் அனைவரும் காப்பு காட்டிக்கொண்டு தீமிதித்தனர்.