பாஜகவுடன் உறவா? - முதலமைச்சர் விளக்கம்
பாஜகவுடன் ரகசிய கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக பாஜகவுடன் திமுக நட்பு பாராட்டி வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழா அரசு விழாவா.? அல்லது திமுக- பாஜக இணைந்து நடத்தும் விழாவா என கேள்வி எழுப்பும் வகையில் இரண்டு கட்சி நிர்வாகிகளும் ஒன்று கூடி விழாவை நடத்தியுள்ளனர். இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையேற்றிருந்தார்.
பிரதமர் மோடி கருணாநிதியின் சேவைகளை புகழ்ந்து வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலினோடு பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்ற அண்ணாமலையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவதாக பேச்சு அடிப்பட்டது. குறிப்பாக மத்தியில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மோடி திமுகவிற்கு வலை வீசுவதாக கூறப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக- பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் இந்த பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு ராஜ்நாத் சிங்கை அழைத்ததால் ஏதோ பாஜகவுன் உறவு வைத்துக்கொள்ள போகிறோம் என்ற கோணத்தில் பேசுகிறார்கள்.
நாங்கள் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
எதிர்த்தாலும், ஆதரித்தாலும் திமுக எப்போதும் அதன் கொள்கையோடு இருக்கும்.
பழனிசாமி மாதிரி ஊர்ந்து, பதுங்கி பதவி வாங்குகிற புத்தி திமுகவிற்கு கிடையாது.
நிச்சயமாக உறுதியாக அண்ணாவின் மீது ஆணையாக சொல்கிறேன் நமக்கென்று இருக்கிற உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்று தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.