இடைநிலை ஆசிரியர் பணி: ஜூன் 23ஆம் தேதி எழுத்துத் தேர்வு..
இடைநிலை ஆசிரியர் பணியில் 1768 பேர் நியமிக்க ஜூன் 23 ஆம் தேதி போட்டி எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.;
ஆசிரியர் தேர்வு வாரியம்
சென்னை தமிழ்நாடு அரசின் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கு போட்டித் தேர்வு எழுத விரும்புபவர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் இவர்களுக்கான போட்டி எழுத்து தேர்வு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வு தாள் ஒன்று (இடைநிலை ஆசிரியர் பணி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது தவறான தகவல்கள் தேர்வாளர்கள் அளிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படும் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
போட்டி எழுத்துத் தேர்விற்கான விண்ணப்பத்தில் அளிக்கப்படும் அனைத்து தகவல்களுக்கும் தேர்வர்களே முழு பொறுப்பாவார்கள் எனவும் , கம்ப்யூட்டர் சென்டர்கள் மூலம் ஏற்படும் தவறுகளுக்கும் அவர்களே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படித்து விண்ணப்பங்களை பூர்த்திசெய்ய வேண்டும் .