சேலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் திடீர் ஆய்வு
சேலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் அறையில் ஆய்வு செய்தபோது மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மயக்கவியல் துறை, புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை பிரிவு, உணவு தயாரிக்கும் கூடம் உள்ளிட்ட மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு அருந்தி சோதனை செய்தார். மேலும் சர்க்கரை நோய் மற்றும் நீண்ட கால நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் கிடைப்பதில்லை என நோயாளிகள் புகார் தெரிவித்தனர். உடனடியாக மருத்துவமனை முதல்வர் மணி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் ஆகியோரிடம் மருந்து மாத்திரைகளின் இருப்பு குறித்து கேட்டறிந்து உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் சேலம் அரசு மருத்துவமனை முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாக உள்ளது பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள சேலம் அரசு மருத்துவமனையில் புற்று நோய்க்காக லீனியர் எக்ஸ்லேட்டர் ரூ.12.5 கோடி ரூபாய் செலவில் அதிநவீன லேசர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் திறக்க உள்ளார் மேலும் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் செவிலியர்களுக்காக ரூ.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செவிலியர் பிளாக் அமைப்பதற்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இருதய நோயாளிகளுக்காக ஏற்கனவே இருக்கக்கூடிய கேத்லேப் மையம் புதுப்பிக்கப்பட்டு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் உள்ள சில வார்டுகளில் நேரடியாக பார்வையிட்டு உள்ளேன் .இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், டெங்கு காய்ச்சல் தற்போது குறைந்துள்ளது மழைக்காலங்களில் சளி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் வரை வாரம் தோறும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் காலி பணியிடங்களை அடுத்து வருகின்ற 40 நாட்களுக்குள் நிரப்பப்படும் என தெரிவித்தார். மேலும் மருத்துவர் உதவியாளர்கள், செவிலியர், மருந்தாளுநர்கள், ஆகிய காலிப் பணியிடங்களையும் நிரப்பப்படும் எனவும் போலி மருத்துவர்கள் இருப்பின் இணை இயக்குனர் மூலம் கண்டறியப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்