தமிழ்நாடு அரசின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு கடந்த மே-2024 தொடங்கி, நடத்திட ஆணை வெளியிடப்பட்டது. மேலும், கலந்தாய்விற்கான உத்தேச காலஅட்டவணை செயல்முறைகளின் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2024-25 ஆம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொதுமாறுதல் கலந்தாய்விற்கு, முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்தனர்.
மேலும், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅளவை மே 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது பதவி வாரியாக பொது மாறுதல் கலந்தாய்விற்கான திருத்திய கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலை, இசை, தையல், இடைநிலை மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு ஜூலை 8 ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வு ஜூலை 9 ஆம் தேதியும் நடைபெறுகிறது. அரசு மற்றும் நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு ஜூலை 10 ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வு ஜூலை 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.
அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வு ஜூலை 23 ஆம் தேதியும் நடைபெறுகிறது. அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு ஜூலை 24 ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வு ஜூலை 25 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேலும், அரசு மற்றும் நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வருவாய் மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு ஜூலை 26 ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வு ஜூலை 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 82 ஆயிரத்து 479 பேர் விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.