தமிழகம், புதுவையில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரும்

தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் நாட்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-05-28 01:05 GMT

தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் நாட்களில் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகம் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 39.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33° – 40° செல்சியஸ் மற்றும் தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33° – 37° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 29° – 36° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20° –25° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 39.6° செல்சியஸ் (+0.7° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 38.9° செல்சியஸ் (+0.9° செல்சியஸ்) பதிவாகியுள்ளது. நேற்று வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘ரெமல்’ புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவிற்கும் (வங்கதேசம்) இடையே கரையை கடந்தது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு / மேற்கு திசை காற்று நிலவுகிறது. இதன் விளைவாக , இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 31 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளையும் நாளை மறுநாளும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News