விரைவில் 125 மொழிகளில் AI தொழில்நுட்பம்

Update: 2024-09-02 10:58 GMT

 AI தொழில்நுட்பம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

2010 ஆம் ஆண்டு Google DeepMind, என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனத்தை கூகுள் உருவாக்கியது. முதலில் AlphaGo, Go விளையாட்டுத் துறையில் AI யை கூகுள் வெற்றிகரமாக பயன்படுத்தி பிரபலமானது.

தொடர்ந்து பல்வேறு மொழிகளைப் புரிந்து கொள்ளும் AI தொழில்நுட்பத்தில் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ARTPARK என்ற செயற்கை நுண்ணறிவு & ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றுடன் இணைந்து Google DeepMind புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தியாவில் உள்ள 773 மாவட்டங்களிலிருந்து 1, 54,000 மணிநேர பேச்சுத் தரவுகளைச் சேகரித்து படியெடுக்கும் இலக்குடன் வாணி திட்டம் 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப் பட்டது.

125 இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் புரிந்துகொள்ளும் மற்றும் பிரதிபலிக்கும் AI மாதிரியை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியா அதிகாரப்பூர்வமாக 22 மொழிகளை அங்கீகரித்துள்ளது. என்றாலும் இந்தியாவில் பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத பல மொழிகளைப் பேசி வருகிறார்கள். இவற்றில் 60 மொழிகள் சுமார் 100 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களால் பேசப்படுகின்றன.

இந்தியாவில் பேசும் மொழிகளில் பல, அதிகமாக அறியப்படாதவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் பேசும் இந்தி, இணைய உள்ளடக்கத்தில் 0.1 சதவிகிதம் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் பேசும் 125 மொழிகளில் 73 மொழிகளில் எந்தவொரு டிஜிட்டல் தரவும் இல்லை என்று கூறும் கூகுள் டீப் மைண்டின் இயக்குனர் மணீஷ் குப்தா, போதிய மொழித் தரவு இல்லாத மொழிகளின் பேச்சுத் தரவுகளை நாடு முழுவதிலும் இருந்து சேகரிப்பதே வாணி திட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம், முதல் கட்டமாக, 80 மாவட்டங்களில் 80,000 பேரிடம் இருந்து 58 மொழிகளில் 14,000 மணிநேர பேச்சு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாணி திட்டம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 160 மாவட்டங்களில் இந்த பேச்சுத் தரவைச் சேகரிப்பை விரிவுபடுத்தி வருகிறது .

இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை உண்மையாகவே பிரதிபலிக்கும் AI-யை உருவாக்க இந்த மிகப்பெரிய தரவு சேகரிப்பு முயற்சி முக்கியமானது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களால் பேசப்படும் ஒவ்வொரு மொழியும், டிஜிட்டல் யுகத்தில் அதற்கென ஒரு இடத்தை வாணி திட்டம் உறுதி செய்கிறது. மேலும், இந்த திட்டத்தால், நாட்டின் வளமான மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

Tags:    

Similar News