Blood Group எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
1900-ஆம் ஆண்டு கார்ல் லாண்ட்ஸ்டீனர் என்னும் மருத்துவரே இரத்தத்தின் வகைகளைக் கண்டுபிடித்தார். இவர் இரத்தத்தைப் பரிசோதனை செய்து இரத்தச் சிவப்பணுக்களில் இருவகையான 'அன்டிஜன்' என்னும் புரதச் சத்து அணுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்த அன்டிஜன் வேறுபாட்டினாலேயேதான் இரத்தத்தின் தன்மையே மாறுபடுகிறது.' ஒருவகை அன்டிஜன் கொண்ட இரத்தத்திற்கு 'A குரூப்' என்றும், இன்னொரு வகை அன்டிஜன் கொண்ட இரத்தத்திற்கு B குரூப்' என்றும் பெயரிட்டார். ஒருவர் இரத்தத்தில் A வகையைச் சார்ந்த அன்டிஜன் இருந்தால், அவர் A குரூப் இரத்தத்தைச் சார்ந்தவர் என்றும், B குரூப் வகையைச் சார்ந்த அன்டிஜன் இருந்தால் அவர் B குரூப் இரத்த வகையைச் சார்ந்தவர் என்றும் பிரித்தார்.
சிலர் இரத்தத்தில் A, B என்னும் இருவகை அன்டிஜனுமே காணப்பட்டன. இந்த இரத்த வகைக்கு AB என்று பெயரிட்டார். சிலர் இரத்தத்தில் A, B என்னும் இருவகை இரத்த அன்டிஜனுமே காணப்படவில்லை. இந்த வகை இரத்தத்தை O குரூப் என்று குறிப்பிட்டார். இதுவரை நூற்றுக் கணக்கான இரத்த வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.