மழை குறைந்து இயல்பு நிலைக்கு மாறிய ஏற்காடு - ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை !!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கன மழை மற்றும் கடும் பனிமூட்டம் இருந்ததால் ஏற்காடிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து ஏற்காடு சுற்றுலா பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக ஏற்காட்டில் இருந்த பனிமூட்டம் விலகி, இயல்பு நிலைக்கு திரும்பி லேசாக வெய்யில் தொடங்கியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை தினமான நேற்று முதல் சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட அண்ணா பூங்கா, ஏறிப்பூங்கா, ரோஜா தோட்டம், லேடி சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில், ஏற்காடு படகு இல்லம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்களில் தவிர்க்கமுடியாத இடங்களில் ஒன்றாக உள்ள ஏற்காடு படகு இல்லத்தில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.