ஷாட்ஸ்

கரூரில் நடைபெறவிருந்த பாமக பிரச்சாரம் ரத்து: அன்புமணி

கரூரில் இன்று நடைபெறவிருந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ரத்து செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் த.வெ.க. பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சொந்தங்களுக்கு இரங்கல் செலுத்தும் வகையிலும், அவர்கள் குடும்பங்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலும், கரூர் உழவர் சந்தைப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று மாலை நடைபெறவிருந்த எனது தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஒத்திவைக்கப்படுகிறது. பரப்புரைக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

விஜய் பேச துவங்குவதற்கு முன்பே 3 பேர் உயிரிழப்பு: துரைமுருகன்

விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் என யூடியூபர் சாட்டை துரைமுருகன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தளத்தில், “விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் ! விஜய்யின் பிரச்சார வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் ஆதவ் அர்ஜூனா உட்பட அனைவருக்கும் மக்கள் மரணிப்பதை பார்த்தும் விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டுருந்துள்ளார் ! கொண்டாட்ட மனநிலையும் ,எந்த விதிகளையும் பின்பற்றாத தொண்டர்களும் ,கூட்டத்தை பெரிதாக காட்ட வேண்டும் என்கிற மாஸ் மனநிலையும் மட்டுமே இம்மரணங்களுக்கான முதன்மை காரணம் ! 10 ஆயிரம் காவலர்கள் இருந்திருந்தாலும் , ஏன் துணை இராணுவமே வந்தாலும் ரசிக மனநிலையில் உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது !” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணையின் அடிப்படையில் கைது நடவடிக்கை இருக்கும்: ஏடிஜிபி

கரூர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், “கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. ஆணைய அறிக்கைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவெக பரப்புரைக்கு போதிய பாதுகாப்பு வழங்கினோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. தேவையான அளவிலான காவலர்கள் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. த.வெ.க கரூர் மாவட்ட செயலாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் உயிரிழப்பு தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் தற்போது ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்” என்றார்.

விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு!!

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விஜய்யின் நீலாங்கரை வீட்டில் காவல்துறையினர் குவிந்துள்ளனர். விஜயிடம் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் வந்துகொண்டிருக்கும் நிலையில், நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாஜக-வின் மூத்த தலைவர்களை மருத்துவமனைக்கு விரைந்து உரிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டுள்ளேன்: நயினார் நாகேந்திரன் இரங்கல்

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பாஜக-வின் மூத்த தலைவர்களை மருத்துவமனைக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டுள்ளேன். கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மாவட்ட தலைவரையும் உடனடியாக தேவையான உதவிகளை செய்து தருமாறும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன் என்று தெறிவித்துள்ளார். 

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: கமல் இரங்கல்!!

நடிகர் கமல் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

நாளை விஜய் பரப்புரை: பயணத் திட்டம் வெளியானது!!

சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கியுள்ளார். அவர் வார இறுதி நாட்களில் தமிழகத்தின் மாவட்டம்தோறும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) கரூர் மற்றும் நாமக்கல் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்ய உள்ளார். இந்நிலையில், பரப்புரை திட்டங்களை தவெக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல், கே. எஸ். திரையரங்கம் அருகில் காலை 8:45 மணிக்கும், கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் மதியம் 12:00 மணிக்கும் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்கான பணிகளை மேற்கொள்ள தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்: துரைமுருகன்

கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் பின்வருமாறு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


மாவட்டம்

மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

மாவட்ட பொறுப்பாளர்கள்

திருநெல்வேலி 

மேற்கு அம்பாசமுத்திரம் ஆலங்குளம்

திரு. இரா. ஆவுடையப்பன்

திருநெல்வேலி 

கிழக்கு நாங்குநேரி இராதாபுரம்

 திரு. ம. கிரகாம்பெல்

நாளை கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் : கடும் நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (சனிக்கிழமை) நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு தவெக சார்பில் போலீசில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. கரூரில் விஜய் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பஸ் நிலைய மனோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய 3 இடங்களில் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையினரிடம் அனுமதி கோரினர். லைட் ஹவுஸ் கார்னர் ஒதுக்குவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க இயலாது என காவல்துறை மறுத்து விட்டதாக கூறப்பட்டது. இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படாத நிலையில், தற்போது கடும் நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி ஒரு ஆடியோ லாஞ்ச் போல இருந்துச்சு: சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பது ஒரு திரைப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா போன்று இருந்தது. கல்வியாளர்களை அழைத்து பேச வைக்க வேண்டியது தானே. எங்கள் ஜவஹர் நேசன் இருக்கிறார். பிரின்ஸ் கஜேந்திரபாபு இருக்கிறார். அவர்களை அழைத்து ஏன் பேச வைக்கவில்லை. கல்வியை முதலாளிகள் லாபம் ஈட்டும் கடையாக திறந்து வைத்து விட்டு இப்படியெல்லாம் சிறந்து விளங்குகிறது என்றால் எப்படி சரியாக இருக்கும்? என கேள்வி எழுப்பினார்.

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை... முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (செப்டம்பர் 26) காலாண்டுத் தேர்வுகள் நிறைவடையும் நிலையில், நாளை (செப்டம்பர் 27) முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்குச் சுமை ஏற்படுத்தும் விதமாக எவ்வித சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமுறையின்போது தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் (Special Classes) நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.விதிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சுற்றறிக்கை மூலம் எச்சரித்துள்ளது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!

மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து உடனடியாக நீதிமன்ற பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை டிஜிபி அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 5 வது முறையாக வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

அடுத்த செக் வைத்த டிரம்ப்..!! மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி!!

அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து மருந்து பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி என்ற இந்த அறிவிப்பு இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதாவது இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து எந்த ஒரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் 100% வரி விதிப்போம் என தெரிவித்திருக்கிறார். ஒரு நிறுவனம் அமெரிக்காவில் தன்னுடைய மருந்து உற்பத்தி ஆலையை கட்டவில்லை என்றால் இந்த வரி அந்த நிறுவனத்திற்கு பொருந்தும் எனக் கூறியிருக்கிறார். அதேபோல அக்டோபர் 1ஆம் தேதி முதல் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரி , பர்னிச்சர்களுக்கு 30% வரி, கனரக லாரிகளுக்கு 25% வரி என டிரம்ப் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தை அமெரிக்கா. குறிப்பாக ஜெனரிக் மருந்துகள் தயாரிக்க கூடிய நிறுவனங்களின் பெரிய வருமானமே அமெரிக்க சந்தையில் இருந்துதான் கிடைக்கிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா அமெரிக்காவுக்கு 31,626 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஏற்றுமதி செய்து இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் இந்தியா 32,500 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. 

தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்!!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக தங்கிய 31 வங்கதேச நாட்டினருக்கு சிறை தண்டனை!!

ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக தங்கிய 31 வங்கதேச நாட்டினருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்த 125 நாட்களை தண்டனை காலமாக அறிவித்து, தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வழக்கிலும் ஒரு சிறார் உள்ளிட்ட 31 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தது ஒட்டன்சத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவு!!

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது. சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்து 80,360 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 252 புள்ளிகள் சரிந்து 24,638 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லை!!

அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்.10 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

நெல்லை: 251 உணவு கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை!!

நெல்லையில் தரமற்ற உணவு பொருட்களை விற்ற 251 கடைகள் மீது உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்தனர். நெல்லை மாவட்டத்தில் கடைகளில் 4 மாதத்தில் ரூ.12.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதத்தில் நெல்லையில் 42 கடைகளுக்கும், தென்காசியில் 38 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நெல்லை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திண்டிவனத்தில் கூடுதல் விலைக்கு உணவு விற்பனை: ரூ.60,000 அபராதம்!!

திண்டிவனத்தில் கூடுதல் விலைக்கு உணவு பொருள் விற்ற திரையரங்குக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.40 கூடுதலாக விற்பனை செய்ததாக ஞானவேல் என்பவர் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு செலவுக்கு ரூ.10,000மும் திரையரங்கில் வழங்கப்பட்ட பொருளுக்கு ரூ.40 வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கண்ணையா திரையரங்குக்கு மொத்தம் ரூ.60,040 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் அழிப்பு!!

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் அழிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் செங்கல்பட்டு தென்மேல்பாக்கத்தில் அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர். நடப்பாண்டில் இதுவரை ரூ.31 கோடி மதிப்பிலான போதைப் பொருள் அழிக்கப்பட்டுள்ளன.