- Home
- /
- ஷாட்ஸ்

குணா குகை கண்காட்சியை உடனடியாக நிறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குணா குகை கண்காட்சியில் அடிப்படை வசதி இல்லை என கூறி சபீனா பானு என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், மதுரை ஐயர் பங்களா பகுதியில் 'குணா குகை கண்காட்சி' செப்.7ம் தேதி முதல் நடந்து வருகிறது. 15 நிபந்தனைகளுடன் கண்காட்சிக்கு அனுமதி தந்த நிலையில் அதில் 10 நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நிபந்தனைகளை நிறைவேற்றிய பின் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியதும் கண்காட்சியை தொடங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

டெல்லியில் இருந்து 152 பயணிகளுடன் நேற்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த விமானம், தரையிறங்காமல் சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு பெங்களூர் சென்று தரையிறங்கியது. அதன் பின்பு அந்த விமானம் நள்ளிரவில் பெங்களூரில் இருந்து சென்னை வந்தது. இதை அடுத்து நேற்று இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், சுமார் 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இதனால் ஏர் இந்தியா விமானங்களில் பயணித்த 312 பயணிகள், பெங்களூர் மற்றும் சென்னை விமான நிலையங்களில் நள்ளிரவில் காத்திருந்து தவிப்புக்குள்ளானார்கள். ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறங்காமல், பெங்களூர் சென்று தரை இயங்கியது ஏன்? என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளிக்காததால் பெரும் குழப்பம் நிலவுகிறது.

செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்துப் பேசுவேன் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். மேலும் 'எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என டிடிவி தினகரன் கூறியது நல்ல கருத்துதான். அதிமுகவை யார் இயக்குகிறார்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும்' எண்வம் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டுமென செங்கோட்டையன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சந்திப்பு நடந்துள்ளது. ஏற்கனவே பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தினகரனை சந்தித்து பேசியிருந்தார்.

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய புகாரில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் புகாரில் விசாரணைக்கு ஆஜராக மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 26ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராக மாதம்பட்டி ரங்கராஜுக்கு நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பினர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்ய டிஜிட்டல் கையெழுத்து கட்டாயம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ECI இணையதளம், செயலியில் வாக்காளர் சேர்க்க, நீக்க ஆதாருடன் இணைத்த பான் எண் மட்டுமே பயன்படுத்த முடியும். வாக்காளர் எண், செல்போன் எண் மூலம் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் செய்யும் நடைமுறை தற்போது உள்ளது. வாக்காளர் பெயர் நீக்க கர்நாடகாவில் போலி அடையாளம், போலி செல்போன் எண் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது. கர்நாடகாவின் ஆலந்த் சட்டமன்ற தொகுதியில் சுமார் 6,000 வாக்காளர்கள் போலியாக நீக்க முயற்சி நடந்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் பி.ஆர்.பாட்டில் தலையீட்டில் கடைசி நேரத்தில் முயற்சி முறியடிக்கப்பட்டது. வாக்குகளை நீக்க வேறு மாநிலங்களில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டது சிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் அரசு கட்டணத்தை விட, அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்குநகரம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மாணவர்களை மிரட்டி கூடுதல் தொகை வசூலிக்க நினைத்தால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டதால் மழையில் நனைந்து வீணாகும் சூழல் உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனே சீர் செய்ய வேண்டும். விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்களை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி மழைக்கால கூட்டத்தொடராக இது நடக்கிறது. இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டப்பேரவை விதி 24 (1)-ன் கீழ் சட்டசபை கூட்டம் அக்டோபர் 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. அன்றைய தினம் முன்னாள் எம்.எல்.ஏ. 8 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. மேலும், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், 2025-2026-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்திற்கான நிதி அனுமதியளிக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என்றார்.

சர்வதேச சந்தையில் விலை உயர்ந்த காரணத்தால் சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை சவரன் ரூ.83,000ஐ தாண்டியது. சென்னையில் ஒரு சவரன் ரூ. 83,440 க்கும், ஒரு கிராம் ரூ. 10,430 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை ரூ.560 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நவராத்திரி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 2ம் தேதி வரை இறைச்சி, மீன், முட்டை விற்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமிலும் இதே போன்ற தடையை விதிக்க வேண்டும் என அப்பகுதியின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர்.

தமிழ் மண்ணில் தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் திமுக இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விழுப்புரம் சிறுவந்தாடு ஓவியர் T.R.கோவிந்தராஜன் எழுதிய கடிதமும் ஓவியப் புத்தகமும் நேற்று வந்தடைந்தது. 87 வயதான கோவிந்தராஜனின் எழுத்தில் வெளிப்படும் கட்சிப் பற்றைக் காணுங்கள் என முதல்வர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.









