ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக் கருத்தரங்கம் - தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு
ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பல்துறை பன்னாட்டுக் கருத்தரங்கம் 'உலகக் கல்வி மற்றும் கலாச்சாரம்' என்ற தலைப்பில் நடந்தது. தொடக்கமாக திருக்குர்ஆன் இறைமறை வசனமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.
இந்த கருத்தரங்குக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கம்பம் முனைவர் பீ.மு. மன்சூர் தலைமை வகித்து, சிறப்புரையாற்றுகையில், சார்ஜா உள்ளிட்ட அமீரகம் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு ஆகும். இந்த கருத்தரங்கு இங்கு நடப்பது சிறப்புக்குரியது என்றார்.
திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. பாக்கியமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி பிரியந்தா நீலவாலா, துபாய் உலகத் தமிழர்கள் இணையவழிப் பேரவையின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் முதுவை ஹிதாயத், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், நிர்வாகக் குழு செயலாளர்கள் தஞ்சை மன்னர் மன்னன், கட்டுமாவடி பைசல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் கே.குணசேகரன், திருவையாறு கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். துபாய் அரசின் பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசா பெற்ற மதுக்கூர் நூருல் அமீன் கௌரவிக்கப்பட்டார்.
கண்ணதாசன் திரையிசைப் பாடல்களில் வாழ்வியல் எனும் தலைப்பில் முனைவ்ர் க. பாஸ்கர், சங்க கால கலாச்சார விளையாடுக்கள் எனும் தலைப்பில் முனைவர் மு. கலைச்செல்வி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். அதனையடுத்து ஆய்வு நூலும் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் சிறப்பிடம் வகிக்கும் பேராசிரியர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் மா.சுகந்தி மற்றும் சென்னை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் கு. விஜயா ஆகியோர் எழுதிய ‘தமிழ் கற்பித்தல்’, சென்னை வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ச.பிரியா எழுதிய ’பதிணென் கீழ்க்கணக்கு அக நூல்களில் உள்ளுறை உவமம், ஈரோடு கு.ஜமால் முஹம்மது எழுதிய ‘தியாகச்சுடர் திப்புசுல்தான்’ ஆகிய நூல்கள் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.
சென்னை, புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் பி. தேவகி நன்றி கூறினார். நிறைவாக இந்திய தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை இலங்கை மாணவர்கள் சுபையிர் அஹில் முஹம்மத், அல்ஃபர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.