ஷார்ஜா இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகத்தை இலவசமாக பார்வையிடலாம் !
ஷார்ஜா இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகத்தை பொதுமக்கள் ரமலான் மாதம் முழுவதும் இலவசமாக பார்வையிடலாம்
ஷார்ஜா : ஷார்ஜா இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகத்தை பொதுமக்கள் ரமலான் மாதம் முழுவதும் இலவசமாக பார்வையிடலாம்.
இது குறித்து ஷார்ஜா அருங்காட்சியக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
ஷார்ஜாவில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்று இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகம் ஆகும். இந்த மையத்தில் இஸ்லாமிய நாகரிகம், வரலாறு, கலாச்சாரம் குறித்த பல்வேறு வகையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் அனைவரும் ரமலான் மாதம் முழுவதும் இலவசமாக பார்வையிடலாம். வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், பின்னர் இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பொதுமக்கள் பார்வையிடலாம்.
இந்த மையத்தில் உள்ள அபுபக்கர் கேலரியானது இந்த உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை குறிப்பிடும் பல்வேறு வகையான தகவல்கள் உள்ளன.
மேலும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்கும் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளது. மக்காவில் உள்ள இறையில்லம் குறித்தும், அந்த இறை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திரைச்சீலை குறித்த விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
சவுதி அரேபியாவின் 1920 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான இஸ்லாமிய வரலாற்று சம்பவங்களை இந்த அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம்.
முகலாயர் காலத்து அரிய வகை பொருட்கள் தொடர்பான கண்காட்சி இந்த அருங்காட்சியகத்தில் நடந்து வருகிறது. இந்த கண்காட்சியானது அடுத்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த அருங்காட்சிய்கத்தில் உள்ள பல்வேறு தகவல்களை www.sharjahmuseums.ae என்ற இணையத்தளம் மூலமும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.