ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு - குமாரபாளையம் போலீசார் விசாரணை
By : King 24x7 Website
Update: 2024-02-15 17:16 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பெராந்தர்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். அதிமுக பிரமுகரான இவர் விசைத்தறிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி இன்று மதியம் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக சுந்தர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது, அவரைத் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் வந்த மர்ம நபர்கள் அவர் வாகனத்தின் மீது மோதி நிறுத்தினர். அப்பொழுது எதிர்பாராத விதமாக சுமதி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னலாய் மறைந்தனர். அப்பொழுது சுமதி கூச்சிலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயன்ற பொழுது அவர்கள் யாரிடமும் சிக்காமல் மறைந்து விட்டனர். இதுகுறித்து சுமதி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் குமாரபாளையம் போலீசார் அப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். குமாரபாளையம் காவல்துறை சார்பில் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள நான்கு சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யாததால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறல் ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப் பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பரித்து சென்ற சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.