கல்குவாரி அமைக்க எதிர்ப்பு
திருச்செங்கோடு தாலுக்கா மல்லசமுத்திரம் ஒன்றியம் மொஞ்சனூர் கிராமம் கோங்கரைப் பாறை என்ற இடத்தில் இரண்டு சர்வே எண்களில் சுமார் 16 ஏக்கர் அரசு பாறை புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் சர்வே எண்50ல் 3.245 ஹெக்டர் என சுமார் 8 ஏக்கர் பாறை புறம்போக்கு உள்ளது. இதில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவு உள்ள பாறை புறம்போக்கு நிலத்தில் தக்கைக்கல் உடைத்து எடுத்துக் கொள்ள முத்து வேல் என்பவரது மனைவி மஞ்சு என்பவருக்கு ரூ 41.50 இலட்சத் திற்கு 10 ஆண்டு களுக்கு குத்தகை வழங்கப்பட்டது. அதன்படி கனிமம் வெட்டி எடுக்க அதே பகுதியில் விவசாயம் செய்து வரும் சுமார் 20 குடும்பத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். எனவே அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கனிமங்களை வெட்டி எடுக்க சென்றபோது பொதுமக்கள் தடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸ் படை குவிக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயகாந்த் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் குத்தகை எடுத்தவர்கள் தரப்பில் தாங்கள் முறைப்படி அரசிடம் அனுமதி பெற்று உரிய தொகையை செலுத்தி விட்டு தான் குத்தகை எடுத்து இருப்பதாகவும் அந்த அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி வரும் சிலர் மட்டும் அரசு உத்தரவிட்டும், வேண்டும் என்றே தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் எங்களை பணி செய்ய விடாமல் ஏறத்தாழ 3 ஆண்டுகளாக தடுத்து வருவதால் எங்களுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படு கிறது. புதிதாக அங்கு குவாரி துவங்கவில்லை. ஏற்கனவே குவாரி இருந்த இடத்தின் அருகில் உள்ள இடத்தில்தான் எங்களது குவாரி செயல்பட உள்ளது என கூறினார்கள். இதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடந்த போது கல்குவாரி அமைக்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. இதனால் சுற்றுவட்டார நிலப் பகுதிகளில் நீர் ஆதாரம் குறைந்துவிடும் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் பல தொல்லைகள் ஏற்படுவதாகவும் எக்காரணத்தை கொண்டும் அங்கு கல்குவாரி அமைக்க விடமாட்டோம். தொடர்ந்து எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என என்றனர். இரண்டு தரப்பிலும் கருத்துக்களை கேட்ட தாசில்தார் விஜயகாந்த், மாவட்ட ஆட்சியருக்கு உங்களுடைய கருத்துகள் கொண்டு செல்லப்படும். அரசின் உத்தரவு வரும் வரை எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுத்தி விடக்கூடாது எனவும் மிரட்டுகிற வகையில் நடந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத் தினார். பேச்சுவார்த்தையின் போது மாவட்ட உதவி புள்ளியியல் அதிகாரி கௌதமி, மண்டல துணை வட்டாட்சியர் வசந்தி, வையப்பமலை வருவாய் ஆய்வாளர் பிரபாவதி, மஞ்சனூர் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரி, எலச்சிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.