பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில், எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதுமட்டுமன்றி, விவசாய பெருங்குடி மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அடிப்படையாக திகழ்ந்துவரும் கால்நடைகளின் நலன் காக்கின்ற வகையிலும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் மற்றும் காப்பீட்டு திட்டம், பராமரிப்பு கடனுதவி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கெனவும், பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பயனுள்ள வகையிலும், அதற்கான சிறப்பு அறிவிப்புகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து வருகிறார். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் பெறப்பட்டு, பொதுமக்களாகிய நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு லிட்டருக்கு ரூபாய் 33 என்று உச்சகட்ட விலையை அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு, கூடுதலாக லாபம் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பால் உற்பத்தியாளர்களின் சிரமங்களை தவிர்ப்பதற்கும், குறிப்பாக பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி, அவர்களுக்கான சமமான அரசாக தமிழக அரசு சிறப்பாக திகழ்ந்து வருகிறது. பால் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் கிராமப்புறங்களின் வருவாய் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அவை அடிப்படையாக அமைகிறது. இவ்வொன்றியத்தின் மூலம் கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட லாபத்தில் இரு மாவட்டங்களை சார்ந்த மொத்தம் 547 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 11,832 உறுப்பினர்களுக்கு லிட்டர் ஒன்றிற்கு ரூ.0.50 வீதம் ரூ.1,35,35,653.80 மதிப்பீட்டில் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இவ்வாண்டிலும் வழங்கிடும் பொருட்டு சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 411 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை சார்ந்த 8,936 உறுப்பினர்களுக்கு ரூ.1,06,07,911 மதிப்பீட்டிலான ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. அதற்கான தொடக்க நிகழ்வு இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.