ஆபத்தான முறையில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் அவலம்
ஆபத்தான முறையில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊருக்கு வெளியே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மயான கட்டிடம் அமைக்கப்பட்டது.
ஆனால் பாதை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு தனியார் நிலங்கள் மற்றும் சிறு குறு, நீரோடை வழியாக இறந்தவர்களின் சடலங்களை கொண்டு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விவசாய நிலங்களில் சோளம் பயிரிட்டப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததுள்ளதால் சிறு குறு ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை கடந்தும் சிறு குறு நீரோடைகளை கடந்து ஆபத்தான முறையில் மூதாட்டியின் உடலை கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மயானம் செல்வதற்கு பாதை இல்லாததால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் நிலவுகிறது. அதுவும் மழை காலங்களில் ஆபத்தான முறையில் செல்ல வேண்டி உள்ளது.
மேலும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மயானம் என்பதனால் மயான கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்து உதிர்ந்து வருவதானால் கட்டிடத்தை சீரமைத்து, மயானத்திற்கு பாதுகாப்பான முறையில் சென்று வர சாலை வசதியும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும் உரிய அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.