குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரைவைப் பணி தொடக்கம்

குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரைவைப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-05 16:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவைப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் அருகே குருங்குளத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கரும்புகளை அரைவைக்காக வழங்கி வருகின்றனர். இந்த ஆலையில் கடந்த ஆண்டு ஆயிரத்து 863 விவசாயிகள் 2.02 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்து ஆலைக்கு வழங்கினர்.

இதேபோல, நிகழாண்டுக்கான கரும்பு அரைவையை உடனடியாக தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான (2023 - 2024) அரைவை பருவம் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது இயந்திரங்களுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, அரைவை கரும்புகளை இயந்திரங்களில் வழங்கினர். அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

நிகழாண்டு 1 லட்சத்து 86ஆயிரம் டன் கரும்பு அரைவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ஆலை அலுவலர்கள் தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பி. ராமசாமி, பாஸ்கரன், பொதுச் செயலர் ஆர். திருப்பதி, செயலர் பி. கோவிந்தராஜ், பொருளாளர் அர்ஜூனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், கரும்புக்கான உரிய விலை கிடைக்காததாலும், காலம் தாழ்த்தி கரும்புக்கான விலையை அரசு வழங்குவதாலும் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. எனவே, கரும்பு உற்பத்தியைப் பெருக்க வேண்டுமானால், மத்திய அரசு விலையை உயர்த்தி வழங்க வேண்டும். வெட்டுக் கூலியை அரசே ஏற்க வேண்டும். அரைவை கரும்புக்கான தொகையை 15 நாள்களுக்குள் வழங்கினால் மட்டுமே கரும்பு உற்பத்தியைப் பெருக்கமுடியும் என்றனர்.

Tags:    

Similar News