ஐயாறப்பர் கோயிலில் பாலாலயம் அடுத்தாண்டு நவம்பரில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
கோவில் விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றது
Update: 2024-02-22 17:36 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தர்மசம்வர்த் தினி உடனாய ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்குவதற்கான பாலாலயம் நேற்று நடைபெற்றது. தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தக் கோயில், தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 51 ஆவது தலமாகும். காவிரிக்கரையில் காசிக்குச் சமமாகக் கருதப்படும் 6 சிவன் கோயில்களில் ஒன்றாகவும் உள்ளது. இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருவது சிறப்பு வாய்ந்தது. இந்தக் கோயிலில் 2013-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு உபயதாரர் மூலம் நிதி பெற்று, கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்து நேற்று காலை பாலாலய திருப்பணிகளை தொடங்கிவைத்தார். முன்னதாக, நேற்று முன்தினம் 1-ம் கால யாக சாலை பூஜை, நேற்று 2-ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை ஆகியன நடைபெற்றன. பின்னர்,கடங்கள் புறப்பட்டு, 11 கோபுரங்கள் உள்ளிட்டவற்றுக்கு பாலாலய திருப்பணி தொடங்குவதற்காக அபிஷேகம் செய்யப்பட்டது. கோயிலில் புதிதாக கொடி மரமும் அமைக்கப்படவுள்ளது. திருப்பணிகள் முடிவடைந்ததும் 2025-ம் ஆண்டு நவம்பரில் கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.