போதிய விலையில்லாததால் பூ விவசாயிகள் வேதனை

திருத்தணி சுற்றுவட்டாரங்களில் போதிய விலையில்லாததால் பூ விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Update: 2024-04-26 01:11 GMT

பூக்கள் விலை குறைவு

திருத்தணி தாலுகா வேலஞ்சேரி, பட்டாபிராமபுரம், சத்திரஞ்ஜெயபுரம், மேதினாபுரம், தாழவேடு, தும்பிக்குளம், கோபாலபுரம், பூனிமாங்காடு, பொன்பாடி உள்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் பூ பயிரிட்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் மல்லி, முல்லை, கனகாம்பரம், கேந்தி, ரோஜா, காக்கடா, ஜாதிமல்லி, சாமந்தி மற்றும் சம்பங்கி போன்ற பூக்கள் அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து திருத்தணி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் தினந்தோறும் காலையில் கூலியாட்கள் வைத்து பூக்களை பறித்து மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். ஒரு சில விவசாயிகள் பூக்களை ரயில் மூலம் சென்னை கோயம்பேட்டிற்கு கொண்டு சென்றும் விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக மல்லி, முல்லை பூக்கள் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அதாவது ஒரு கிலோ மல்லி, முல்லை வெறும், 70 முதல் 100 ரூபாய் விலைக்கு விற்பனையாகிறது. இதனால் பூ பறிக்கும் கூலியாட்களுக்கு கூட கூலி தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், சில விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். காரணம் தற்போது கோடை காலம் என்பதால் மல்லி, முல்லை பூக்கள் வரத்து அதிகளவில் உள்ளதால் போதிய விலை இல்லை. அதுவே மழை காலங்களில் பூக்கள் வரத்து குறைவால் ஒரு கிலோ மல்லி, முல்லை 1,500- - 2,500 ரூபாய் வரை மார்க்கெட்டில் விற்பனையாகிறது.

Tags:    

Similar News