காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எம்பி பேச்சு!
அரசியல் செய்திகள்
புதுக்கோட்டை மாநில ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும் என சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் பேசினார். புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் கூட்டணிக் கட்சியால்தான் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெற்றி பெற்றனர் என்பதை மறுக்க முடியாது. முதல்வர் ஸ்டாலின் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. குறிப்பாக மகளிருக்கு ஆயிரம் வழங்கும் திட்டம் மக்களைச் சென்றடைந்திருக்கிறது.பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என சிறுபான்மையின மக்கள் முடிவு செய்தார்கள். இதனால், திமுக அணிக்கு கணிசமான வாக்குகள் விழுந்தன. இதில், எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு சில எம்பிக்களை மட்டும் வைத்துக் கொண்டு கட்சியை வளர்க்க முடியாது. தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆட்சியில் பங்கேற்க வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும்.தேர்தலில் நம்மைப் பயன்படுத்துகிறார்கள். தேர்தல் முடிந்ததும் விட்டுவிடுகிறார்கள் என்ற குரல் எல்லா இடங்களிலும் இருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்கள் பிரச்னைகளில் தலையிட்டு பேசுகிறார்கள். அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். நாமும் அப்படி தனித்தன்மையுடன் இருக்க வேண்டும். நெல்லை ஜெயக்குமார் மரணத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவ என்கவுன்டர் செய்திருக்கிறார்கள். இதனைக் கேட்க வேண்டும். நம் கருத்தை ஆழமாகப் பதிவு செய்தால்தான் மக்கள் நம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள். மக்களிடத்தில் நாம் இடம்பிடிக்க வேண்டுமானால், மக்கள் பிரச்னைகளைப் பேச வேண்டும். இளைஞர்களைக் கவர வேண்டுமானால், கட்சி நடைமுறையில் மாற்றம் வர வேண்டும் என்றார் கார்த்தி சிதம்பரம்.