ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் செலுத்தும் முறை கோரி ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மயிலாடுதுறையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் விஜயா திரையரங்கு அருகில் ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் கொள்ளிடம் பிரபு முன்னிலை வகித்தார். இதில் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவு மாநில துணைத்தலைவர் காசிராமன், மாநில மகளிர் பாசறை செயலாளர் கவிதா அறிவழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மணி.செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மின்கட்டணத்தை 2 மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணமானவர்கள் அனைவரும் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஒழுங்குபடுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் முருகப்பா, துரைராஜ், மணிகண்டன், சத்யராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.