சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்!
வேலூர் மாநகர பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுவதாகவும், மாடுகள் திடீரென முட்டுவதால் பொதுமக்களுக்கு காயங்கள் ஏற்படுவதாகவும் கமிஷனர் ஜானகிக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவர் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கவும், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். அதன்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் முருகேசன், மேகராஜ், சிவக்குமார் ஆகியோர் வேலூர் பழைய பஸ்நிலையம், நேதாஜி மார்க்கெட் பகுதிகளில் சுற்றித்திரிந்த 6 மாடுகளை தூய்மை பணியாளர்கள் உதவியுடன் பிடித்தனர். பின்னர் மாடுகளை வாகனத்தில் ஏற்றி மண்டல அலுவலக வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட 6 மாடுகளின் உரிமையாளருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்டத்தவறினால் மாடுகள் ஏலம் விடப்படும். தொடர்ந்து மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.