சேலம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் தீப்பிடித்த விவகாரம்

16 வயது சிறுவன் கைது

Update: 2024-07-24 09:56 GMT
சேலம் பள்ளப்பட்டி ஏரியையொட்டி பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் ஒரு பகுதியில் சுமார் 18 அடி உயரத்தில் செயற்கையாக மலை போன்ற அமைப்புடன் கூடிய குகை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. அந்த மலையை சுற்றி பைபரால் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த யானை, சிங்கம், புலி, கரடி, குரங்கு, மான் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட விலங்கு பொம்மைகள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து மாநகராட்சி செயற்பொறியாளர் திலகவதி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பூங்கா பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த 16 வயது சிறுவன் ஒருவன் விளையாட்டாக பழைய காகித குப்பைகளை சேகரித்து பூங்காவில் குகை அருகே வைத்து தீ வைத்துள்ளார். அந்த தீ குகை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் பரவியதும், இதில் குகை போன்ற அமைப்பு எரிந்து சேதமானதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து இளஞ்சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

Similar News