சேலம் மாநகராட்சி மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்

புதிதாக பொறுப்பேற்ற ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் கூறினார்.

Update: 2024-07-26 03:16 GMT
சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக நாகப்பட்டினத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டராக பணியாற்றிய ரஞ்ஜீத் சிங் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி புதிய ஆணையாளராக ரஞ்ஜீத் சிங் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் மாநகராட்சி பகுதியில் சாக்கடை கால்வாய், மழை நீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும். மாநகராட்சி மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குடிநீர், மின்சார வசதி 24 மணி நேரம் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். குப்பைகள் தேங்கி கிடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் தேவை அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். மழை காலத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பணி முடியாத ஒரு சில இடங்களில் ஜெனரேட்டர், பம்புகள் வைத்து அதன் மூலம் மழைநீர் முழுமையாக நிறைவேற்றப்படும்.மாநகராட்சிக்கு வருவாயை பெருக்க அனைத்து பணிகளும் தீவிரமாக்கப்படும். மக்கள் சேவைக்காகத்தான், மாநகராட்சி நிர்வாகம். எனவே சேலம் மாநகராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முழுவீச்சில் பணியாற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை ஆணையாளர் அசோக்குமார், தலைமை கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன், செயற்பொறியாளர் திலகம், நகர் நல அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News