முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பெருந்திருவிழா முன்னிட்டு நடைபெற்ற வைரத் தேரோட்டத் திருவிழா!

பக்தி

Update: 2024-07-30 02:58 GMT
ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பெருந்திருவிழா முன்னிட்டு நடைபெற்ற வைரத் தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்* புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், திருவீதியுலாவும் நடந்து வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் வானவேடிக்கைகள் முழங்க மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வீற்றிருக்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் நான்கு வீதி வழியாக பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் மங்கள இசை முழங்க ஆடி அசைந்து வலம் வந்த தேர் இறுதியாக கோயில் முன்பாக நிலை நின்றது தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருவிழாவில், கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்

Similar News