மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு
நன்றி தெரிவித்து வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் பலர் டி.எம். செல்வகணபதி எம்.பி. மற்றும் என்னிடம் (ராஜேந்திரன் எம்.எல்.ஏ.) விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இதை பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டு உள்ளார். வழக்கமாக ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந்தேதி வரை மொத்தம் 137 நாட்கள் மேட்டூர் அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு முன்னதாக ஜூலை 30-ந் தேதியே தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சருக்கு நன்றி இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மற்றும் விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மேயர் ராமச்சந்திரன், விவசாய சங்க நிர்வாகிகள் கந்தசாமி, தங்கராசு, அண்ணாச்சி உள்ளிட்ட விவசாயி கள் பலர் உடனிருந்தனர்.