மேட்டூர் அணை உபரிநீரை ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதல்- அமைச்சருக்கு, அருள் எம்.எல்.ஏ கோரிக்கை
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அருள் எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- மேட்டூர் அணையில் திறக்கப்படும் உபரிநீரானது சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கொண்டசமுத்திரம்ஏரி வழியாக ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் வழியாக செல்கிறது. கொண்டசமுத்திரம் ஏரியில் உள்ள குழாயில் இருந்து உபரிநீரை வெளியேற்றினால் கொண்டசமுத்திரம் ஏரி, கங்காதரன் குட்டை, நைனாத்தாள் ஏரி, சின்னேரி, செம்மண்கூடல், எல்லாயூர்ஏரி நிரம்பி அணைமேடு வழியாக சரபங்கா ஆற்றில் கலக்கிறது. இதேபோல் 2-வது வழிதடம் மாங்குப்பை ஏரி வழியாக சேலம்- ஆத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. மாங்குப்பை ஏரியில் உள்ள குழாயில் இருந்து உபரிநீரை வெளியேற்றினால் மாங்குப்பை ஏரி, பூமிநாயக்கன்பட்டி ஏரி, கீரைபாப்பம்பாடி ஏரி, அழகுசமுத்திரம் ஏரி நிரம்பி சரபங்கா நதியில் கலக்கிறது. இதேபோல் மாவட்டத்தில் இன்னும் பல்வேறு வழித்தடங்களில் நீர்நிலைகள் நிரம்பாமல் உள்ளன. மேலும் சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1,500 அடிக்கு கீழ் சென்று விட்டது. மேட்டூர் அணை உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே உபரி நீரை ஏரிகளில் நிரப்ப முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். உபரிநீரை ஏரிகளில் நிரப்புவதால் சேலம் மாவட்டம் வளம் பெறும். நிலத்தடி நீர்மட்டம் உயரும். சேலம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை முழுவதுமாக சரிசெய்யப்படும். ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.